மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சேலம் போக்குவரத்து கழக ஊழியரிடம் ரூ.46 லட்சம் மோசடி ஈரோட்டை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு
மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போக்குவரத்து கழக ஊழியரிடம் ரூ.46 லட்சம் மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், சேலம் மணக்காட்டில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக தொடர்பாக அவர் ஈரோட்டை சேர்ந்த ஜாகீர்உசேன், அசின் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் ஏதாவது ஒரு துறையில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவிக்கு கண்டிப்பாக உயர் அதிகாரி வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.46 லட்சம் வரை செலவு ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி, அவர்கள் இருவரிடம் ரூ.46 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு கொடுத்துள்ளார். ஆனால் ஜாகீர்உசேன், அசின் ஆகியோர் கூறியபடி அவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தராமல் பல ஆண்டுகளாக கால தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ஈரோட்டிற்கு சென்று அவர்களிடம் கிருஷ்ணமூர்த்தி கேட்டபோது, சரியான பதில் தெரிவிக்காமல் இருந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்துவிட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் கிருஷ்ணமூர்த்தி சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், கிருஷ்ணமூர்த்தியிடம் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மூலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சேலம் அரசு போக்குவரத்துக்கழக ஊழியரிடம் அவரது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.46 லட்சம் மோசடி செய்ததாக ஈரோட்டை சேர்ந்த ஜாகீர்உசேன், அசின் ஆகிய 2 பேர் மீது நேற்று பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேசமயம், தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.