ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வின் ராஜினாமா கடிதத்தை அங்கீகரிப்பதில் சட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும்; சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி
ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வின் ராஜினாமா கடிதத்தை அங்கீகரிப்பதில் சட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். வேறு யாருடைய ராஜினாமா கடிதமும் எனக்கு வரவில்லை. ராஜினாமா கடிதத்தை அங்கீகரிப்பதில் சட்ட வழிமுறைகளை பின்பற்றப்படும். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், பொது நலன் கருதி யார் வேண்டுமானாலும் ஆட்சேபனை தெரிவிக்க முடியும்.
சபாநாயகருக்கு பரம அதிகாரம் இல்லை. சபாநாயகர், சட்ட விதிமுறைகளின்படி தனது பணியை மேற்கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியும். ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. ஒரு கட்சியை சேர்ந்தவர். அதனால் அவரது ராஜினாமாவுக்கு அவருடைய கட்சியோ அல்லது அவர் சார்ந்த தொகுதி மக்களின் ஆட்சேபனையோ இருக்கிறதா?, இல்லையா என்பதை கண்டறிய வேண்டும். அதுபற்றி எனக்கு தெரியவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் நடவடிக்கை சரியில்லை என்றால், அவரின் பதவியை வாபஸ் பெற சட்டத்தில் இடம் இல்லை. அதனால் பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். எம்.எல்.ஏ.வின் ராஜினாமாவுக்கு எதிராக கருத்துகளை கூறுங்கள் என்று நான் யாரையும் கேட்க மாட்டேன்.
ஆட்சேபனை வராவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது. 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததாக யார் சொன்னது. அவ்வாறு இருந்தால் ஒரு ராஜினாமா கடிதத்தை மறைத்து வைத்துக்கொள்ள முடியுமா?. எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள், ராஜினாமா கடிதம் எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்து விதிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.