நாமக்கல்லில் சாலைப்பணியாளர்கள் முகத்தில் கருப்பு துணி கட்டி போராட்டம்

நாமக்கல்லில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் முகத்தில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம் நடத்தினர்.

Update: 2019-07-03 22:15 GMT
நாமக்கல், 

சாலைப்பணியாளர்களுக்கு 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் முகத்தில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இதில் சங்கத்தின் பொருளாளர் விவேகானந்தன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், துணை தலைவர் இளவேந்தன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் முகத்தில் கருப்பு துணி கட்டி கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் பொறுப்பிற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும். ஜனநாயக ரீதியில் போராடும் சாலைப்பணியாளர்கள் மீது காவல்துறை மூலம் தாக்குதல் நடத்தி இழிவுபடுத்திய நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் மற்றும் தலைமை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் காவல்துறை வரம்புமீறி செயல்படும் போக்கை மாற்றி கொள்ள வேண்டும். சாலைப்பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்