குஷால் நகர் டவுனில் தனியார் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் திருட்டு
குஷால் நகரில் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து நூதன முறையில் ரூ.3 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குடகு,
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குஷால் நகர் டவுன் முல்லுசோகே பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று ரூ.3 லட்சத்தை எடுத்தார். பின்னர் அவர் அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளின் முன்பக்க ‘டேங்க் கவரில்’ வைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனது. இதனால் அவர் பி.எம். சாலையில் உள்ள ஒரு பஞ்சர் கடைக்கு சென்றார்.
அங்கு மோட்டார் சைக்கிளை கடையின் முன்புறம் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த யாரோ ஒரு மர்ம நபர், வண்டியின் டேங்க் கவரில் இருந்த ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். மீண்டும் தனது மோட்டார் சைக்கிளின் அருகே வந்த சிவக்குமார், வண்டியின் டேங்க் கவரில் வைக்கப்பட்ட பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் இதுபற்றி குஷால் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் வங்கி முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், பஞ்சர் கடை அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த மர்ம நபர், சிவக்குமாரை வங்கியில் இருந்தே பின்தொடர்ந்து வந்து பணத்தை திருடி இருப்பதும், சிவக்குமாரின் மோட்டார் சைக்கிள் பஞ்சராக காரணமாக இருந்ததும் அவர்தான் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடிச்சென்ற அந்த மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.