நாமக்கல்லில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்லில் நேற்று தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அதையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

Update: 2019-07-03 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, கடைவீதி உள்பட முக்கிய சாலைகள் வழியாக பூங்கா சாலை சென்றடைந்து முடிவுற்றது.

இதில் தூய்மை இந்தியா திட்டத்தின் திடக்கழிவு மேலாண்மை, டெங்கு காய்ச்சல், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக நடந்து சென்றனர்.

முன்னதாக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் தூய்மையே சேவை இயக்கத்தில் ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஆணையாளர் சுதா தலைமையில் நடந்தது.

இதில் பொது இடங்களில் தூய்மையை கடைபிடிப்பது, திறந்த வெளியில் அசுத்தம் செய்யாத கிராமங்கள், நகரங்களை உருவாக்குவது, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவது என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் துப்புரவு அலுவலர் சுகவனம், துப்புரவு ஆய்வாளர்கள் உதயகுமார், செல்வராஜ், சையது காதர் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாமக்கல் நகராட்சி 39-வது வார்டிற்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரிப்பதற்கு வசதியாக குப்பை கூடைகளை அப்பகுதி மக்களுக்கு நகராட்சி அதிகாரிகள் வழங்கினர்.

மேலும் செய்திகள்