3 நகைக்கடை உரிமையாளர்களை கடத்தி பணம் பறிப்பு: 12 பேர் கும்பல் கைது; 3 கார்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நகைக்கடை உரிமையாளர்களை கடத்தி பணம் பறித்த 12 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பஜார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 39). நகைக்கடை உரிமையாளர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி பேலாளம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பதிவு எண் இல்லாத காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், ஆனந்தை கத்தி முனையில் கடத்தி சென்று, கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியது. பின்னர் 20 லட்சம் ரூபாய் கொடுத்த பின் ஆனந்தை மர்ம கும்பல் விடுவித்தது.
இது தொடர்பாக, சூளகிரி போலீசில் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஆனந்தை கடத்தியது ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த மல்லேஷ் (38), சப்படியை சேர்ந்த பால்ராஜ் (38), நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த சபரிநாதன், திருச்செங்கோட்டை சேர்ந்த விக்கி, ஆனந்த், இலியாஸ், தனபால் ஆகியோர் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மல்லேஷ் மற்றும் பால்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். மற்ற 5 பேரையும் தேடி வருகின்றனர்.
கெலமங்கலம் சாரதா பள்ளி அருகே வசித்து வருபவர் குமான்ராம் (41). நகைக்கடை உரிமையாளர். கடந்த மாதம் 8-ந் தேதி இவர் ஓசூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கடத்தி சென்று 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது. பின்னர் ரூ.40 லட்சம் கொடுத்த பின் குமான்ராமை அந்த கும்பல் விடுவித்து தப்பி சென்றது. இது குறித்து குமான்ராம் கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அவரை கடத்தியது தேவகானப்பள்ளியை சேர்ந்த நாகராஜ் (24), ஏ.கொத்தப்பள்ளியை சேர்ந்த மாதேஷ் (28), பிரபாகர், குமார், கிருஷ்ணப்பா உள்ளிட்ட 7 பேர் என தெரியவந்தது. அதில், நாகராஜ், மாதேஷ் கைது செய்யப்பட்டனர். மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சூளகிரியை சேர்ந்தவர் உமாராம் (40). நகைக்கடை உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் பாகலூர்-சர்ஜாபுரம் சாலையில் கொத்தப்பள்ளி கேட் பகுதியில் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த 8 பேர் கும்பல் உமாராமை பணம் பறிப்பதற்காக கடத்த முயன்றது. ஆனால் அவர்களிடம் இருந்து உமாராம் தப்பி சென்று பாகலூர் போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில், அவரை கடத்த முயன்றது சூளகிரி கீழ் தெருவை சேர்ந்த மன்சூர் அலிகான் (24), கே.திப்பனப்பள்ளியை சேர்ந்த அபிலாஷ் (20), ஆலப்பட்டி இருளர் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (22), ஓசூர் பேரண்டப்பள்ளியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (19), ஓசூர் சப்ஜெயில் சாலையை சேர்ந்த சதிஷ் (20), சாந்தி நகரை சேர்ந்த நாடக நடிகர் மணிஷ் (19), பாலக்கோடு மாரவாடியை சேர்ந்த முத்துராஜ் (24), சர்ஜாபுரத்தை சேர்ந்த சுமந்தகுமார் (23) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் 3 நகைக்கடை உரிமையாளர்களை கடத்தியதாக மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த கும்பல் இது போன்று தொழில் அதிபர்களை கடத்தி பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.