திருவட்டார் அருகே துணிகரம் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைவரிசை

திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;

Update:2019-07-04 03:45 IST
திருவட்டார்,

திருவட்டார் அருகே உள்ள பருத்திவிளை கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். கொத்தனார். இவருடைய மனைவி லதா (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் வெள்ளிகோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். தினமும் லதா, மகனை பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் லதா மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தார். பருத்திவிளை பகுதியில் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் லதாவின் அருகில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் திடீரென லதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தான். இதனால், அதிர்ச்சி அடைந்த லதா திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் நகை பறித்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து லதா திருவட்டார் போலீசில் புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்