அருமனை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் போராட்டம் விளையாட்டு மைதானத்தில் புதிய கட்டிடம் கட்ட எதிர்ப்பு

அருமனை மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் புதிய கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-03 23:00 GMT
அருமனை,

அருமனை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்கள். அதனால், இந்த பள்ளி மத்திய அரசின் திட்டத்தில் விளையாட்டு பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆயத்து பணிகள் நடைபெற்றுவருகிறது.

 இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டால் அருமனை சுற்றுவட்டார கிராமபுறத்தை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கவும், அதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்தவும் வழிபிறக்கும். அதோடு இந்த பள்ளிக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள மத்திய அரசு திட்டங்கள் கொண்டு வரப்படும், புதிய விளையாட்டுகளும் கிராமப்புற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

இந்தநிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தை தேர்வு செய்து அதில் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். புதிய கட்டிடம் மைதானத்தில் கட்டப்பட்டால் மத்திய அரசின் திட்டத்தில் இருந்து இந்த பள்ளி நீக்கப்படும்.

எனவே, புதிய கட்டிடத்தை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலையில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர், மாணவர்கள் பள்ளியின் மைதானத்தில் அமர்ந்து கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையொட்டி அங்கு அருமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  விளவங்கோடு தாசில்தார் புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரும் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பெற்றோர்கள் புதிய கட்டிடத்தை மாற்று இடத்தில் கட்ட கோரிக்கை விடுத்தனர். அதற்கு தாசில்தார், இதுபற்றி கலெக்டரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், கட்டிட பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைதொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்