தீவட்டிப்பட்டி அருகே திருட்டு நகையை வாங்கினாரா? நகைக்கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை
தீவட்டிப்பட்டி அருகே திருட்டு நகையை வாங்கியதாக கைதானவர்கள் கூறியதை தொடர்ந்து நகைக்கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதை அறிந்ததும் அவருடைய உறவினர்கள் போலீசாரை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்,
சென்னை அம்பத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜனவரி மற்றும் மே மாதங்களில் வீடுகளில் 24 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுபற்றி அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயராகவன், ஜமீலா பானு ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதன்பின்னர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னை கொளத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் சுமார் 27 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வாலிபர்கள் தங்கமணி, குமரேசன், சரவணகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது 3 பேரும், திருட்டு நகைகளை சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நாச்சனம்பட்டியில் ஒரு நகைக்கடையில் விற்பனை செய்ததாக கூறினார்களாம். இதையடுத்து கைதான 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து அம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அதில், 2 பேரை அழைத்துக்கொண்டு போலீசார் நேற்று நாச்சனம்பட்டிக்கு வந்தனர். திருட்டு வழக்கில் கைதான 3 பேரும் நகைகளை விற்றதாக கூறிய நகைக்கடைக்கு சென்றனர். அங்கிருந்த நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். நகைக்கடையிலும் ஆய்வு செய்தனர்.
இதை அறிந்ததும் நகைக்கடைக்காரரின் உறவினர்களும், அந்த பகுதி மக்களும் திரண்டு வந்து போலீசாரை முற்றுகையிட்டனர். உள்ளூர் போலீசாருக்கு தெரியாமல் எப்படி வெளியூரில் இருந்து வந்து விசாரணை நடத்துகிறீர்கள்? நீங்கள் எந்த ஊர் போலீஸ்? என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விசாரணை நடத்த வந்தது அம்பத்தூர் போலீசார் என எடுத்துக்கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.