வேலூர் சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் அதிகாரிகள் அதிர்ச்சி

கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-07-03 23:15 GMT

வேலூர்,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த அருணகிரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கற்பழிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட அவர் கடந்த 2017–ம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800–க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நன்னடத்தை கைதிகள் சிலர் ஜெயிலுக்கு வெளியில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோன்று சிறைக்கு அருகில் நன்னடத்தை கைதிகளால் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முடிதிருத்தும் கடையும் நடத்தப்படுகிறது.

அதன்படி நேற்று சிறைக்கு வெளியே உள்ள தோட்டத்தில் நன்னடத்தை கைதிகள் சிலர் குழுக்களாக பிரிந்து வேலைசெய்து கொண்டிருந்தனர். அவர்களை சிறைக்காவலர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். பின்னர் பகல் 12.30 மணிக்கு அனைவரும் மதிய உணவுக்காக மீண்டும் சிறைக்கு சென்றனர். அப்போது வெளியே சென்ற அனைத்து கைதிகளும் வந்துவிட்டார்களா என்று சிறைக்காவலர்கள் பார்த்தபோது ரமேஷை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறைக்காவலர்கள் விவசாய தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அங்கும் அவரை காணவில்லை. அவர் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்தபோது உடனிருந்த கைதிகளுக்கும், சிறைக்காவலர்களுக்கும் தெரியாமல் தப்பி ஓடியது தெரியவந்தது.

உடனடியாக இதுபற்றி சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடைய உத்தரவின்பேரில் சிறை மற்றும் சிறையை சுற்றி உள்ள பகுதிகளிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை எங்கும் காணவில்லை. இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மத்திய சிறையில் கடந்த ஆண்டு கைதி ஒருவர் சிறையின் மதில்சுவரில் உள்ள கம்பியில் வேட்டியை கட்டி அதன்வழியாக ஏறிக்குதித்து தப்பி ஓடினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது மேலும் ஒரு கைதி தப்பி ஓடி இருப்பது சிறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்