வானவில் : அலாரம் அடித்தபடி ஓடும் ‘கிளாக்கி’

பல்வேறு காரணங்களுக்காக அலாரம் வைப்பது வழக்கமாகிவிட்டது.

Update: 2019-07-03 11:01 GMT
காலையில் தூங்கும் சுகமே அலாதி. அலுவலகத்துக்குச் செல்ல, ரெயிலை பிடிக்க என பல்வேறு காரணங்களுக்காக அலாரம் வைப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் வழக்கம்போல இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே என்ற எண்ணம் இயல்பாகத் தோன்றி உங்களை மேலும் சில மணி நேரங்கள் தூங்க வைத்துவிடும். ஆனால் ‘கிளாக்கி’ என்ற இந்த கடிகாரம் இருந்தால் நீங்கள் நிச்சயம் எழுந்துதான் ஆக வேண்டும். இதன் தோற்றமே வித்தியாசமானது.

இரு புறமும் சக்கரங்களுடன் குழந்தைகள் விளையாடும் சக்கர பொம்மையைப் போன்றிருக்கும் இந்த கிளாக்கி, நீங்கள் காலையில் எழுந்திருக்க வேண்டிய நேரத்துக்கு அலாரம் வைத்தால், அந்த நேரத்தில் அலாரம் தொடங்கும். சரி பாதிக் கண்ணை திறந்து அலாரத்தை அணைத்துவிட்டு மேலும் தூங்கலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அலாரம் அடிக்கத் தொடங்கிய உடனே இது ஓட தயாராகிவிடும். நீங்கள் அணைக்க முற்பட்டால் இது கீழே குதித்து அறை முழுக்க பயங்கரமான சத்தம் எழுப்பியபடி ஓடும். அதைப்பிடிக்க துரத்திக் கொண்டுதான் ஓடவேண்டும்.

இந்த அலைச்சலிலேயே உங்கள் தூக்கம் கலைந்துவிடும். இன்னிக்காவது எழுந்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சபதமெடுத்து, ஆனால் தினசரி தூங்கிவழியும் மாணவர்களுக்கு மிகவும் ஏற்றது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் கண்டுபிடிப்புதான் இது. தூக்கத்திலிருந்து விழிக்க அலாரம் வைக்கும் பலரும் அதை அணைத்துவிட்டு தூங்குகின்றனர். இதற்கு என்ன செய்யலாம் என்ற நோக்கத்தில் உருவாக்கிய கிளாக்கி கடிகாரம் இன்று அவரை கோடீஸ்வரியாக்கிவிட்டது.

இதில் 4 பேட்டரிகள் உள்ளன. இதன் எடை 240 கிராம் மட்டுமே.

மேலும் செய்திகள்