நயினார்கோவில் அருகே, காவிரி குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகி வரும் தண்ணீர்

நயினார்கோவில் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது.

Update: 2019-07-02 22:45 GMT
நயினார்கோவில்,

நயினார்கோவில் யூனியன் பகுதியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காலி குடங்களுடன் வெகு தூரம் சென்று தண்ணீர் சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் நயினார்கோவில் அருகே உள்ள வாணியவல்லம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை முன்பு காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வீணாகி வருகிறது.

அப்பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் வீணாகி வரும் தண்ணீரை குடங்களில் சேகரித்து செல்கின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

நயினார்கோவில் பகுதி முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், இளைஞர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். ஆனால் நயினார்கோவில் யூனியன் பகுதியில் பல்வேறு இடங்களில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தற்போது குழாய்களை முறையாக பராமரிக்காததால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்