தனுஷ்கோடி, பாம்பனில், கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
தனுஷ்கோடி, பாம்பனில் வழக்கத்திற்கு மாறாக சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று முன்தினம் முதல் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று 2-வது நாளாக பலத்த காற்று வீசியதுடன், கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டது. தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் எம்.ஆர்.சத்திரம்-கம்பிப்பாடு இடையே பல இடங்களில் சாலைகளை மணல் மூடியுள்ளது. மேலும் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை தாண்டி சுமார் 20 அடி உயரத்திற்கு ராட்சத கடல் அலைகள் ஆக்ரோஷமாக மேல் நோக்கி சீறி எழுந்தன.
மேலும் பலத்த காற்றால் தனுஷ்கோடி சாலை முழுவதும் புழுதி பறப்பதால் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் சென்ற சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதேபோன்று பாம்பன் பகுதியிலும் பலத்த சூறாவளி காற்று வீசிவருவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீன்பிடி டோக்கனும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஏராளமான நாட்டுப்படகுகளும் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மண்டபம் பகுதியிலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீன் துறையினர் அறிவிப்பை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதற்கிடையே நேற்று ராமேசுவரத்தில் இருந்து காலை 11.15 மணிக்கு மதுரைக்கு புறப்பட்ட பாசஞ்சர் ரெயில் பாம்பன் ரெயில் பாலம் அருகே வரும்போது பலத்த காற்றால் சிக்னல் கிடைக்காமல் அந்த ரெயிலானது பாலத்தின் நுழைவு பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. காற்றின் வேகம் குறைந்த பின்பு சுமார் 10 நிமிடம் தாமதமாக அந்த ரெயில் பாலத்தை கடந்து மதுரை நோக்கி சென்றது.
மேலும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வந்த மற்றொரு பாசஞ்சர் ரெயிலும் காற்றின் வேகத்தால் சிக்னல் கிடைக்காமல் பாலத்தின் நுழைவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காற்றின் வேகம் குறைந்த பின்பு 10 நிமிடம் தாமதமாக அந்த ரெயிலானது பாலத்தை மெதுவாக கடந்து ராமேசுவரம் வந்தடைந்தது.