தூத்துக்குடியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வலியுறுத்தல்

தூத்துக்குடியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-07-02 22:46 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் ஆறு வகையான கழிவுகள் மேலாண்மை விதிகள் குறித்த 2 நாள் கருத்தரங்கம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தொடங்கியது.

கருத்தரங்கத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நம் நாட்டில் நாளொன்றுக்கு ஒரு மனிதர் சுமார் 200 கிராம் முதல் 800 கிராம் வரை கழிவுகளை கொட்டுகிறார்கள். கிராம பகுதியில் 200 கிராம் முதல் 500 கிராம் வரையிலும் நகர்புற பகுதியில் கூடுதலாகவும் கழிவுகள் உருவாகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள், மீன்பிடி தொழில், விவசாயம், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் பல்வேறு கழிவுகள் உருவாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 18 லட்சம் மக்கள் உள்ளார்கள். இவர்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 700 டன் வரை கழிவுகள் உருவாகிறது. மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், அபாயகரமான கழிவு, திடக்கழிவு, மின்னணுவியல் கழிவு, மருத்துவக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு மற்றும் கட்டுமானம் கட்டிட இடிபாடு கழிவு என 6 வகையான கழிவுகள் குறித்து 2 நாள் கருத்தரங்கம் தேசிய அளவில் 30 நகரங்களில் நடத்தி உள்ளது. அதன்படி இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதில் மிகவும் அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்குகின்றனர். இந்த ஆலோசனைகளை தெரிந்து கொண்டு, அதனை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை அலுவலர்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் கழிவுகளை சேகரிப்பவர்களின் பொறுப்புகள், அவற்றை ஈரமான, உலர்ந்த மற்றும் அபாயகரமான கழிவுகளாக பிரிப்பது, மாசுபடுத்தும் ஊதிய கொள்கையின் அடிப்படையில், கழிவு சேகரிப்பவர்களுக்கு பயனாளர் கட்டணம் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பிற வகையான கழிவுகள், அவற்றை கையாளுதல், அவற்றை அகற்றும் பல்வேறு வகையான நடைமுறைகள் மற்றும் பல்வேறு வகையான பங்குதாரர்களின் கடமைகள், உள்ளூர் அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்புகள் ஆகியவை குறித்தும், திடக்கழிவுகளை பயன்படுத்தி எரிபொருட்கள், உரம் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

இதில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரிதா செரின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாலசுப்பிரமணியம், கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையா, தேசிய உற்பத்தி திறன் குழு துணை இயக்குனர்கள் ராஜூ, இதயசந்தர், உதவி இயக்குனர் சந்தியா, பேராசிரியர் நாகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்