ஜவஹர் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் தகவல்

ஜவஹர் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.

Update: 2019-07-02 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் காவல்துறை, சமூகநல அமைப்புகள் மூலமாக வரப்பெற்ற கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில், ஜவஹர் பஜாரில் உள்ள நடைமேடைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளதால் பாதசாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆகவே, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெரும்பாலானோர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதேபோல, காந்தி கிராமம் இரட்டைத்தொட்டி பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை அருகில் பஸ்களை நிறுத்தாமல், போக்குவரத்துக்கு இடையூறாக வேறு இடத்தில் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும், நெரூர் அருகே உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் பேசியதாவது:-

அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்தாலே விபத்துகள் நேரிடாது. நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் வேகமாக பயணிக்கும்போது, சாலையின் குறுக்கே செல்வது, ஒருவழிப்பாதையாக உள்ள அணுகு சாலையில், சாலை விதிகளுக்கு மாறாக எதிர்திசையில் செல்வது, இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்றவற்றால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

கரூரிலுள்ள நெடுஞ்சாலை மற்றும் பிரதான சாலையில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து விதிகள் பற்றிய விளக்கக்குறியீடு பலகைகளை வைக்க வேண்டும். காவல்துறையினர், நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள தற்காலிக தடுப்புகளை சீரான இடைவெளியில் வைக்க வேண்டும். அப்போதுதான் சிறிய வாகனம் முதல் பெரிய வாகனங்கள் எளிதில் செல்ல இயலும்.

ஜவஹர் பஜாரில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதசாரிகளுக்கு இடையூறாகவும் இருக்கும் சாலையோர கடைகளை அகற்ற வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களையும், சாலை விதிகளை பின்பற்றாமல் விபத்தை உருவாக்கும் வகையில் வாகனம் ஓட்டும் நபர்களையும் விசாரணைக்குப்பின் அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். உரிய அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சந்தியா(கரூர்), எம்.லியாகத் (குளித்தலை) மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்