அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

குடிமராமத்து பணிகளின் கீழ் அணைக்கட்டு புதுப்பிக்கப்படும் இடத்தினையும், ஏரி புனரமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் வினய் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2019-07-02 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நீர் வள ஆதாரத்துறையின் சார்பில் அரியலூர் வட்டம், மல்லூர் கிராமத்தில் உள்ள நல்லேரியில் குடிமராமத்து பணிகளின் கீழ் அணைக்கட்டு புதுப்பிக்கப்படும் இடத்தினையும், ஏரி புனரமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் வினய் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 46 லட்சம் மதிப்பில் 12 ஏரிகள் மற்றும் வரத்துவாய்கால்கள் குடிமராமத்து பணிகளின் கீழ் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லூர் கிராமத்தில் உள்ள நல்லேரியினை குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நல்லேரி பாசனதாரர்கள் சங்கம் மூலம் ஏரி கரைகளை புனரமைக்கும் பணி நிறைவுற்றது. அதனை தொடர்ந்து மாணிக்கவாசகர் ஓடையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 613 மீட்டர் நீளமுள்ள வடிகாலினையும், பழுதடைந்துள்ள அணைக்கட்டினையும் புனரமைக்கப்பட உள்ளது. மேலும் மல்லூரிலிருந்து நைனேரியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஏரியின் கரைகள், வரத்துவாய்க்கால், வடிகால் மற்றும் ஏரியிலுள்ள 2 மதகுகளும் புனரமைக்கப்பட உள்ளது. இதனால் விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வின் போது, அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர் மருதமுத்து மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்