ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி முக்கொம்பு மேலணையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி முக்கொம்பு மேலணையில் நேற்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-02 23:00 GMT
ஜீயபுரம்,

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது, காவிரின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்றும், மற்றும் ஏரி, குளங்களை முறையாக தூர்வார வேண்டும், காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமையை பாதுக்காத்து தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்பு குழு மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் விவசாயிகள் நேற்று திருச்சி முக்கொம்பு மேலணை தெற்கு பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரை தலைமை தாங்கினார். ராஜேந்திரன், கவித்துவன், ராஜாரகுநாதன், துரைபாண்டியன், கண்ணன், சந்திரசேகர், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நீதி பேரவையை சேர்ந்த ரவிக்குமார் வரவேற்று பேசினார். திரளான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். போராட்டம் காரணமாக அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்டத்தின்போது சங்க தலைவர் சின்னத்துரை கூறியதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். காவிரிப்படுகை பாசன மாவட்டங்கள் அனைத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

12 மாவட்டங்களின் பாசன ஆதாரங்களையும், 22 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரங்களையும் அழித்து காவிரிப் படுகையில் 500-க்கும் மேற்பட்ட இடத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் வரை கிட்டத்தட்ட 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. அடுத்த கட்டமாக காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம்.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அமைச்சர்களோ தண்ணீர் பஞ்சம் இல்லை. தண்ணீர் பற்றாக்குறைதான் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு கொடுத்த அடியை மறந்து விட்டு பேசுவது நல்லதல்ல. அவர்களுக்கு தைரியம் இருந்தால், துணிச்சல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தட்டும். மக்கள் பிரச்சினையை தீர்க்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த அடியை உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் கொடுப்பார்கள். திருச்சி காவிரி மேலணை முக்கொம்பில் புதிதாக கட்டப்பட உள்ள கதவணையுடன் கூடிய உயர்மட்ட மேம்பாலத்தை மாயனூர் அணையைபோல போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்