‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு‘ திட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
ஊட்டி,
புதுவை மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக உள்ள சுந்தரி நந்தாவின் தாயார் ஊட்டி அருகே உள்ள குருத்துக்குளி கிராமத்தில் மரணம் அடைந்தார். அவருடைய இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று விமானம் மூலம் கோவை வந்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஊட்டி சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் முதல்-அமைச்சர் நாராணயசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், புதுச்சேரி உள்பட 5 மாநில முதல்வர்கள் சந்தித்தோம். அவரிடம் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை வாபஸ் பெற வலியுறுத்தினோம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்த போது, கட்சியில் இதுபோன்ற சரிவுகள் ஏற்பட்டன. அதனை தொடர்ந்து மாபெரும் சக்தியாக உருவெடுத்தது.
சோனியா காந்தி பொறுப்பேற்கும் போது, சில பிரச்சினைகள் வந்தன. இதுகுறித்து ராகுல்காந்தியிடம் 2 மணி நேரம் பேசினோம். எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம். நாடு முழுவதும் முதல்-மந்திரிகளின் மகன்கள் மற்றும் மந்திரிகளின் மகன்கள் அரசியலிலும், பதவியிலும் உள்ளனர். இதனை வாரிசு அரசியல் என்று கூறக்கூடாது.
கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த போது, வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்தப்படும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டு வர உள்ளதுடன், இந்தி மொழியை கட்டாயமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட தென்மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை எதிர்த்து வருகிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும்.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ரேஷன் கார்டுகள் சிவப்பு, மஞ்சள் கார்டுகள் என இனம் பிரித்து வழங்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பெடியின் செயல்களால் பல்வேறு பணிகளை மேற்கொள்வதில் பிரச்சினைகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது புதுவை அமைச்சர் கந்தசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட காரணம் பருவமழை பொய்த்ததும், கிருஷ்ணா நதிநீர் கிடைக்காததும்தான். தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாத கிரண்பெடி தமிழக அரசியல் தலைவர்களை ஊழல்வாதி என்று கூறி உள்ளார். அதை கூற அவருக்கு எந்த அருகதையும் இல்லை. அவரே அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறார். கிரண்பெடியின் நடவடிக்கையால் மக்கள் கொந்தளிப்பு அடைந்து உள்ளனர். ஆதாரம் இல்லாமல் பேசுவது தவறு. அவருக்கு விளம்பரம் என்ற வியாதி இருப்பதால்தான் இதுபோன்று பேசி வருகிறார் என்றார்.