மதுரை மாவட்ட கோர்ட்டில், கோகுல்ராஜ் கொலை வழக்கு சாட்சிகளிடம் மறுவிசாரணை தொடங்கியது
மதுரை மாவட்ட கோர்ட்டில் கோகுல்ராஜ் கொலை வழக்கு சாட்சிகளிடம் மறுவிசாரணை தொடங்கியது.
மதுரை,
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவரது இறப்பு குறித்து சந்தேக மரணம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
பின்னர் இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். நாமக்கல் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாவட்ட தீண்டாமை ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. கைதானவர்களில் 12 பேர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தனசேகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது யுவராஜ் உள்பட 14 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் உள்ள செல்வராஜூம் ஆஜரானார்.
பின்னர் சாட்சிகளிடம் மறு விசாரணை தொடங்கியது. கொலையுண்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா உள்பட சாட்சிகள் 4 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சாட்சிகளிடம் கொலை சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் காட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
முடிவில், இந்த வழக்கை நீதிபதி இன்றைக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்திவைத்தார்.