மதுரையில், தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
மதுரையில் தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மதுரை,
மதுரை செல்லூர் சத்தியமூர்த்தி நகர் அருகே ஓடைக்கரை பகுதி உள்ளது. முட்புதர்களால் ஆன அந்த பகுதிக்குள் நேற்று ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கு தலையில் ரத்தம் வடிந்த நிலையில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்தார். உடனே அவர் அதுகுறித்து செல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் விரைந்து வந்து அந்த உடலை கைப்பற்றினார்கள். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார் என்று விசாரணை நடத்தினர்.
அதில், இறந்தவர் திருப்பாலை விஸ்வநாதநகரை சேர்ந்த வீரச்சாமி மகன் சதீஸ்குமார்(வயது 29), கொத்தனாராக வேலை செய்து வந்தார். மேலும் அவர் மீது தல்லாகுளம், செல்லூர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. திருமணமாகி ஓராண்டுகள் ஆன அவருக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு அவர் எவ்வித பிரச்சினைக்கும் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் செல்லூரில் நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டை விட்டு சென்றுள்ளார். அங்கு நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அவரை ஓடைக்கரை பகுதிக்கு அழைத்து வந்தனர்.
அங்கு சதீஸ்குமாரை சரமாரியாக தாக்கி அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் சதீஸ்குமாரை முட்புதருக்குள் அழைத்து செல்வதும், அங்கிருந்து அவர்கள் மட்டும் அவசரமாக வெளியே வருவதும் பதிவாகி உள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.