நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கலைச்செல்வன் பொறுப்பேற்பு

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கலைச்செல்வன் புதியதாக பொறுப்பேற்றார்.

Update: 2019-07-01 22:30 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சண்முகப்பிரியா கடந்த ஓராண்டுக்கு மேலாக பணிபுரிந்தார். இந்த நிலையில் அவர் சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கலைச்செல்வன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார். புதியதாக பொறுப்பேற்ற அவரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், சங்கு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டி நகர் மற்றும் நகர பகுதிகளில் சென்னையை போல சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த கவனம் செலுத்தப்படும். கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகள் கேரளா, கர்நாடகா எல்லைகளில் அமைந்து உள்ளதால், அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சமூக வலைத்தளங்களில் வரும் புகார்கள் குறித்து உண்மைத்தன்மையை அறிந்து விசாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரியில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற கலைச்செல்வனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி திருவறும்பூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனராகவும் பணிபுரிந்து உள்ளார். அவர் நீலகிரி மாவட்டத்தில் 89-வது போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது மனைவி ராஜஷீலா சென்னை கலால் துறையில் துணை ஆணையராக பணிபுரிந்து வருகிறார். 

மேலும் செய்திகள்