பணி இடமாறுதல் பெற்று செல்ல வேண்டாம் என்று ஆசிரியையுடன், மாணவ-மாணவிகள் பாசப்போராட்டம்
பணி இடமாறுதல் பெற்று செல்ல வேண்டாம் என்று ஆசிரியையுடன், மாணவ-மாணவிகள் பாசப்போராட்டம் நடத்தினர்.;
சிக்கமகளூரு,
தரிகெரே தாலுகாவில், பணி இடமாறுதல் பெற்றுச் செல்ல வேண்டாம் என்று ஆசிரியையுடன் மாணவ-மாணவிகள் பாசப்போராட்டம் நடத்தினர். இதனால் அந்த ஆசிரியை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்தப்பட்டார். இதற்கான உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் பிறப்பித்தனர்.
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா நேரலக்கெரேவைச் சேர்ந்தவர் சவிதா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரை திடீரென கல்வித்துறை அதிகாரிகள் குண்டமடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்தனர். இதையடுத்து நேற்று காலையில் பள்ளிக்கு வந்த சவிதா, அங்கிருந்த ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் பிரியாவிடைபெற்றுச் செல்ல முயன்றார்.
அப்போது அவர் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்ட மாணவ-மாணவிகள் அவரை பள்ளியில் இருந்து இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தினர். மேலும் அவரை சூழ்ந்து கொண்டு கைகளை பிடித்து கதறி அழுத னர். மாணவ-மாணவிகளின் இந்த பாசப்போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான தகவல் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சென்றது. அதையடுத்து வட்டார கல்வி அதிகாரி தலைமையிலான குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மாணவ-மாணவிகளிடம் பேசி ஆசிரியை சவிதாவை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறினர். ஆனால் மாணவ-மாணவிகள் தங்களுடைய பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து ஆசிரியை சவிதாவை மீண்டும் அதே அரசு பள்ளியில் பணியில் அமர்த்தி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.