இடப்பிரச்சினை தொடர்பாக தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் அலுவலகத்திற்கு தீப்பந்தத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தவரால் பரபரப்பு

இடப்பிரச்சினை காரணமாக தீக்குளிக்கும் நோக்கில், பெட்ரோல் பாட்டிலுடன் மோட்டார் சைக்கிளில் தீப்பந்தத்தை எரியவிட்டு கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-01 23:00 GMT
கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி மற்றும் 24-ந்தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 17-ந்தேதி ஒரு பெண்ணும், 24-ந்தேதி கந்துவட்டி கொடுமையால் ஒருவரும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதன் எதிரொலியாக நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்தவர்களை போலீசார் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி மனு கொடுக்க உள்ளே அனுப்பி வைத்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தினை சுற்றிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று மதியம், கரூர் அருகேயுள்ள பெரியகோதூரை சேர்ந்த நடராஜன் (வயது 45) என்பவர் தனது மோட்டார் சைக்கிளின் முன்புற பகுதியில், பெட்ரோலை பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு, கொழுந்து விட்டு எரியும் தீப்பந்தத்துடன் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயிலினுள் நுழைந்தார். அங்கிருந்த போலீசார் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக உள்ளே செல்ல முயன்றார். அப்போது கலெக்டர் அலுவலகம் முன்புறம் நின்று கொண்டிருந்த போலீசார் ஓடி வந்து நடராஜனை பிடிக்க முற்பட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கிய அவர், தீப்பந்தத்தை கையில் எடுத்து உடலில் தீ வைத்து தீக்குளிக்க முயன்றார். ஆனால் அதற்குள் போலீசார் அவர் வைத்திருந்த தீப்பந்தம், பெட்ரோல் பாட்டிலை பிடுங்கினர். அப்போது அவர் 30 ஆண்டுகளாக என்னுடைய இடப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. எனவே என்னை சாக விடுங்கள்... என கோஷம் எழுப்பினார். அங்கிருந்த தீயணைப்பு வாகனம் உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள், எரிந்த தீப்பந்தத்தை மண், நீரில் அமிழ்த்தி அணைத்தனர். பின்னர் நடராஜனை பிடித்து போலீசார் விசாரித்த போது, இடப்பிரச்சினை தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லாததால் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்