முகநூலில் காதல் திருமண படத்தை வெளியிட்டதால் தகராறு தாக்குதலில் காயம் அடைந்த வாலிபரின் தாய் சாவு

காதல் திருமணம் செய்து கொண்ட படத்தை முகநூலில் வெளியிட்ட சம்பவத்தில், தாக்கப்பட்ட வாலிபரின் தாயார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை உள்பட 2 பேரை கைது செய்தனர்.

Update: 2019-07-01 22:15 GMT
வேட்டவலம்,

வேட்டவலம் செக்குமேடு தெருவை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் ராஜசேகர் என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இளம்பெண்ணின் பெற்றோர் மகளிடம் பேசி சமாதானம் செய்து அவரை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். இதையடுத்து ராஜசேகர் தனது திருமண போட்டோவை முகநூலில் பதிவிட்டு உள்ளார். அத்துடன் மனம் உடைந்த ராஜசேகர் தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்துள்ளார். இதனால் மயக்கம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.

இதற்கிடையே ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் ராஜசேகரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது தாய் லட்சுமியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் லட்சுமியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் இந்தசம்பவம் குறித்து இளம்பெண்ணின் தந்தை மற்றும் உறவினரை வேட்டவலம் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேட்டவலம் போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்