இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் கோரிக்கை மனு
இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கோரி நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நடந்தது. புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சண்முகசுந்தரம் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர், கேரளா கவர்னர் சதாசிவத்தை வரவேற்க சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் இலங்கையில் ஏற்பட்ட போர் காரணமாக 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து வேலூர் மாவட்டத்தில் பாணாவரம், மேல்மொணவூர், குடியாத்தம், மின்னூர் உள்பட 6 முகாம்களில் வசித்து வருகிறோம். அரசு கொடுக்கும் உதவிகளை பெற்று, 30 வருடங்களாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு தமிழக மக்களுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் பிள்ளைகள் பட்டப்படிப்பு படித்தாலும் அதற்கு தகுந்தாற்போல் வேலைக்கு செல்ல முடியவில்லை. கால் நூற்றாண்டுக்கும் மேலாக நாங்கள் தமிழ்நாட்டிலேயே இருந்து விட்டதால், இந்த மண்ணில் எங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை தொடர்வதற்கு எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கேட்டுக்கொள்கிறோம், என்று கூறி உள்ளனர்.
வேலூரை அடுத்த குளவிமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தற்போது முதல் குளவிமேடு கிராமத்தில் மாநகராட்சியின் 44-வது வார்டில் உள்ள புறம்போக்கு இடத்தில் மாநகராட்சி குப்பையை கொட்ட ஆய்வு செய்துள்ளனர்.
இங்கு, குப்பையை கொட்டினால் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும். எனவே எங்கள் பகுதியில் குப்பையை கொட்ட மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும், என்று கூறி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூர் தொகுதி செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்துள்ள மனுவில், வேலூர் சலவன்பேட்டை அம்மனாங்குட்டை ரோடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு 30 வருடங்களாக வீடுகட்டி வசித்து வருகிறோம். மின்கட்டணமும் செலுத்தி வருகிறோம். தாசில்தாரிடம் மனுகொடுத்தும் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. விசாரணை நடத்தி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.
கொணவட்டம் அரசு பள்ளியில் படித்துவிட்டு உயர்கல்விக்கு சென்ற மாணவ-மாணவிகளும் நேற்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் தங்களுக்கு இதுவரை இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. உடனடியாக மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து மழைநீர் சேகரிப்பு, ஏரி, குளங்களை தூர்வாருதல் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு சக்கர நாற்காலிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் செந்தில்குமாரி உடனிருந்தார்.