ரெயிலில் பயணம் செய்தவர் தவறி விழுந்து சாவு தண்டவாளத்தை கடந்த மூதாட்டியும் பலியான பரிதாபம்
ஆம்பூர் அருகே ஓடும் ரெயிலில் பயணம் செய்தவர் தவறி விழுந்து பலியானார். இன்னொரு சம்பவத்தில் காட்பாடி அருகே தண்டவாளத்தை கடந்த மூதாட்டி ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
ஜோலார்பேட்டை,
காட்பாடி பகுதியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆம்பூரை கடந்தபோது படிக்கட்டின் அருகே டிரவுசர் அணிந்தவாறு ஒருவர் அமர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் ரெயில் விண்ணமங்கலத்தை நெருங்கியபோது படிக்கட்டின் அருகே அமர்ந்து வந்தவர் திடீரென தவறி விழுந்தார். இதில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். அவரது கால்கள் மடங்கிய நிலையில் காணப்பட்டன.
தலைகுப்புற விழுந்திருக்கலாம் என்பதால் முகமும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் பிணம் கிடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த ஊரைசேர்ந்தவர்? என்பது தெரியாததால் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடியை அடுத்த எல்.ஜி.நகர் பகுதியில் மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை பகுதியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு அவர் அந்த இடத்திலேயே இறந்தார். மஞ்சள் நீல நிறம் கலந்த சேலையும், ரோஸ் நிறத்தில் பாவாடையும் அணிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இரு சம்பவங்கள் குறித்தும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.