தேனி கண்மாயில் பிணமாக கிடந்தவர், சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையம் முற்றுகை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

தேனி கண்மாயில் பிணமாக கிடந்தவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-07-01 22:15 GMT
தேனி,

தேனி நகரில் மதுரை சாலையோரம் தாமரைக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் கடந்த 29-ந்தேதி 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் கிடந்தது. பிணமாக கிடந்தவர் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து இருந்தார். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில், சின்னமனூர் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த கோட்டைக்கருப்பு என்பவருடைய மனைவி கலையரசி என்பவர் தனது கணவரை கடந்த 22-ந்தேதியில் இருந்து காணவில்லை என்று சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அந்த புகாரில், ‘எனது கணவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 22-ந்தேதி கோவைக்கு வேலைக்கு செல்வதாக கூறி எனது கணவரை 3 பேர் அழைத்துச் சென்றனர். அன்றில் இருந்து எனது கணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது கணவரை அழைத்துச் சென்றவர்களில் ஒருவரிடம் கடந்த 28-ந்தேதி நான் கேட்டபோது, 22-ந்தேதியே எனது கணவரை சின்னமனூரில் விட்டுச் சென்று விட்டதாக தெரிவித்தார். எனவே எனது கணவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

அந்த மனுவுடன் அவர் தனது கணவரின் புகைப்படத்தையும் இணைத்து இருந்தார். அதை பார்த்த போலீசார், அந்த புகைப்படத்தில் இருப்பவர் தேனி கண்மாயில் பிணமாக கிடந்தவரை போன்று இருந்ததால், தேனி போலீஸ் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட புகைப்படத்தை கலையரசியிடம் காண்பித்தனர்.

அதை பார்த்ததும் அவர் கதறி அழுதபடியே, அது தனது கணவர் தான் என அடையாளம் காட்டினார். இதையடுத்து அவரை தேனி போலீஸ் நிலையம் செல்லுமாறு சின்னமனூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கலையரசி மற்றும் அவருடைய உறவினர்கள் தேனி போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை வந்தனர். கோட்டைக்கருப்புவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் முற்றுகையை கைவிட்டனர்.

பின்னர் அவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தனர். இதனால் தேனி-மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களிடம் க.விலக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்போதைய நிலையில் அவருடைய உடலில் காயங்கள் இல்லை என்றும், அவர் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு, பிணத்தை வாங்கிச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்