இருவேறு சம்பவங்களில் கிணற்றில் தவறி விழுந்து 2 விவசாயிகள் பலி

இருவேறு சம்பவங்களில் கிணற்றில் தவறிவிழுந்து 2 விவசாயிகள் பலியானார்கள்.

Update: 2019-07-01 22:15 GMT
ஆத்தூர், 

ஆத்தூர் குராணிகரடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அந்த பகுதியில் உள்ளது. நேற்று மாலை அங்கு உள்ள கிணற்றின் அருகே புல் அறுப்பதற்காக நடந்து சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் கிணற்றுக்குள்ளேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுதாகர் உடலை மீட்டனர். இது குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெங்கவல்லி அருகே புனல்வாசல் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 35), விவசாயி. இவர் நேற்று விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே சோளக் கதிர்களை அடுக்கிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். அப்போது கிணற்றின் சுவரில் அவரது தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கிணற்றுக்குள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் கெங்கவல்லி தீயணைப்பு துறையினர் வந்து அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்