சேலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் செவ்வாய்பேட்டை கண்ணார் தெருவை சேர்ந்தவர் மாதவராஜ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ஐஸ்வர்யா(வயது 18). சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் வழக்கம்போல் மாதவராஜ் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது ஐஸ்வர்யா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் மாணவி ஐஸ்வர்யாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது.
இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.