பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 4 பேர் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் நிவாரணம் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்
பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து, தீ விபத்து மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு இறந்த 4 பேரின் குடும்பத் தினருக்கு ரூ.16 லட்சம் நிவாரண நிதியை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 527 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சி புதுக்காலனியை சேர்ந்த மனோ என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து அவரின் குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும், பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தீ விபத்து மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.16 லட்சத்திற்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார். மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ஜெகதீசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.