புதிய கால அட்டவணை வெளியீடு: நெல்லை ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

நெல்லை ரெயில்களின் புறப்படும் நேரம் மற்றும் வரும் நேரம் புதிய கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-07-01 22:45 GMT
நெல்லை,

இந்திய ரெயில்வே துறை ஜூலை மாதம் 1-ந்தேதியை அடிப்படையாக கொண்டு ரெயில்களின் புதிய கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. இதில் நெல்லையில் இருந்தும், நெல்லை வழியாகவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரெயில்கள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் ரெயில்கள் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேசுவரத்தில் இருந்து இரவு 8.50 மணிக்கு பதில் 8.55 மணிக்கு புறப்படும்.

நெல்லை-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து இரவு 10.30 மணிக்கு பதில் 10.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் பாலக்காடு- நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு காலை 6.30 மணிக்கு பதில், 15 நிமிடங்கள் முன்னதாக அதாவது காலை 6.15 மணிக்கு வந்து சேரும்.

ஸ்ரீவைஷ்ணோ தேவி கட்ரா -நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16790) நெல்லைக்கு நள்ளிரவு 12.55 மணிக்கு பதில் 10 நிமிடங்கள் முன்னதாக 12.45 மணிக்கு வந்து சேரும். ஸ்ரீவைஷ்ணோதேவி கட்ரா -நெல்லை (ஹிம்சாகர் இணைப்பு எக்ஸ்பிரஸ்) வாராந்திர ரெயில் நெல்லைக்கு மாலை 6.30 மணிக்கு பதில் 6 மணிக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூர் -நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லைக்கு காலை 7.05 மணிக்கு பதில், 20 நிமிடங்கள் முன்னதாக காலை 6.45 மணிக்கு வந்து சேரும்.

சென்னை -தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (குருவாயூர் எக்ஸ்பிரஸ்) வாஞ்சி மணியாச்சியில் இருந்து இரவு 7.30 மணிக்கு பதில் 7.25 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடி -சென்னை இணைப்பு ரெயில் வாஞ்சி மணியாச்சிக்கு காலை 8.30 மணிக்கு பதில் 8.25 மணிக்கு வந்து சேரும்.

செங்கோட்டை -சென்னை வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு பதில் 4.25 மணிக்கு புறப்படும். செங்கோட்டை -சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டையில் இருந்து மாலை 6.15 மணிக்கு பதில் 6.10 மணிக்கு புறப்படும்.

இதுதவிர புதுச்சேரியில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் கிழமை மாற்றப்பட்டு உள்ளது. அதாவது, புதுச்சேரியில் இருந்து வியாழக்கிழமைக்கு பதில் இனிமேல் ஞாயிற்றுக்கிழமை புறப்படும். அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு பதில் இனிமேல் திங்கட்கிழமை புறப்படும்.

மேலும் கொல்லம் -சென்னை எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள், நெல்லை -பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 15 நிமிடங்கள், சிலம்பு எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள், ராமேசுவரம் -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 5 நிமிடங்கள், ஸ்ரீவைஷ்ணோதேவி கட்ரா -நெல்லை வாராந்திர ரெயில் 10 நிமிடங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் பாசஞ்சர் ரெயில்களின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. புனலூர்-மதுரை பாசஞ்சர் ரெயில் மதுரை ரெயில் நிலையத்துக்கு காலை 6.45 மணிக்கு பதில் காலை 6.35 மணிக்கு சென்றடையும். செங்கோட்டை -மதுரை பாசஞ்சர் ரெயில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு பதில் 5 நிமிடங்கள் தாமதமாக 6.35 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மதுரைக்கு 10.40 மணிக்கு பதில் 10.35 மணிக்கு சென்றடையும்.

இதேபோல் மாலையில் செங்கோட்டை -மதுரை பாசஞ்சர் ரெயில் 3.55 மணிக்கு பதில் 3.50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மதுரைக்கு இரவு 7.35 மணிக்கு பதில் 7.30 மணிக்கு சென்றடையும். மதுரையில் இருந்து மாலையில் புறப்படும் பாசஞ்சர் ரெயில் செங்கோட்டைக்கு இரவு 9.35 மணிக்கு பதில் 9.30 மணிக்கு சென்றடையும்.

செங்கோட்டை -நெல்லை பாசஞ்சர் ரெயில் காலை 6.45 மணிக்கு பதில் 6.50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நெல்லை சந்திப்புக்கு காலை 9 மணிக்கு பதில் 8.55 மணிக்கு வந்து சேரும். இதேபோல் மாலையில் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் செங்கோட்டையில் இருந்து மாலை 5.55 மணிக்கு பதில் 5.50 மணிக்கு புறப்படும்.

நெல்லை -செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் நெல்லையில் இருந்து காலை 7.15 மணிக்கு பதில் 7 மணிக்கே புறப்படும். இந்த ரெயில் செங்கோட்டைக்கு 9.25 மணிக்கு பதில் 9.15 மணிக்கு சென்றடையும். இதேபோல் காலை 9.25 மணிக்கு புறப்படும் நெல்லை -செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் 5 நிமிடங்கள் முன்னதாக 9.20 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் செங்கோட்டைக்கு காலை 11.50 மணிக்கு பதில் 20 நிமிடங்கள் முன்னதாக 11.30 மணிக்கு சென்றடையும். நெல்லையில் இருந்து மதியம் புறப்பட்டு செல்லும் பாசஞ்சர் ரெயில் செங்கோட்டைக்கு மாலை 4.45 மணிக்கு பதில் 25 நிமிடங்கள் முன்னதாக 4.20 மணிக்கு சென்றடையும்.

நெல்லை -திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் நெல்லையில் இருந்து காலை 9.30 மணிக்கு பதில் 10 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் திருச்செந்தூருக்கு காலை 11 மணிக்கு பதில் 11.35 மணிக்கு சென்றடையும். இதே போல் திருச்செந்தூர் -நெல்லை பாசஞ்சர் ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 9.15 மணிக்கு பதில் 10 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நெல்லைக்கு காலை 11 மணிக்கு பதில் 12.10 மணிக்கு வந்து சேரும்.

திருச்செந்தூர் -பாலக்காடு பாசஞ்சர் ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 11.15 மணிக்கு பதில் 11.40 மணிக்கு புறப்படும். இதுதவிர செங்கோட்டை -கொல்லம் பாசஞ்சர் ரெயில் செங்கோட்டையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதில் 50 நிமிடங்கள் முன்னதாக 11.40 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் கொல்லத்துக்கு மாலை 5.20 மணிக்கு பதில் 3.55 மணிக்கு சென்றடையும். இரவு 8.35 மணிக்கு நெல்லைக்கு வந்து சேர வேண்டிய தூத்துக்குடி -நெல்லை பாசஞ்சர் ரெயில் இரவு 8.30 மணிக்கு வந்து சேரும். நேற்று முதல் இந்த ரெயில்களின் நேர மாற்றம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்