போச்சம்பள்ளி அருகே பெண் அடித்துக் கொலை? நிர்வாண நிலையில் உடல் மீட்பு
போச்சம்பள்ளி அருகே பெண் உடல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேட்டில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. இங்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இங்கு வாடமங்கலம் செல்லும் சாலையில் தென்பெண்ணை ஆற்றில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் மிதப்பதாக பாரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் இருந்தது. அவர் இறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என்பதால் உடல் அழுகி காணப்பட்டது.
மேலும் அவரது உடலில் முகம் மற்றும் சில இடங்களில் காயங்கள் இருந்தன. இதனால் அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்து உடலை ஏரியில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.