குடிநீர் கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-07-01 22:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வ.பரமக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக குடிப்பதற்கும் இதர பயன்பாட்டிற்கும் தண்ணீர் கிடைப்பதில்லை என்றும், இதனால் தண்ணீரின்றி அவதிப்படும் நாங்கள் இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். மாதம் ரூ.2,500 தண்ணீருக்காக மட்டுமே செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட மஞ்சள்பட்டினம் பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தும் நிலை உள்ளது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல சேத்திடல் அருகே உள்ள சீனாங்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் உப்புநீராக உள்ளதால் தண்ணீருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவதிப்படுவதாகவும் உடனடியாக தங்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் உடனடியாக குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்