பயிற்சி பெண் போலீஸ் தர்ணா போராட்டம் வேலூர் கோட்டையில் பரபரப்பு

சக போலீசார் தாக்கியது குறித்து தெரிவித்த புகார்மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பயிற்சி பெண் போலீஸ், வேலூர் கோட்டையில் உள்ள பயிற்சிமையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.;

Update: 2019-07-01 22:15 GMT
வேலூர், 

வேலூர் கோட்டையில் போலீஸ் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 196 பெண் போலீசார் கடந்த டிசம்பர் மாதம் முதல் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் ஒரு அறையில் 3 பேர்வீதம் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தினமும் கோட்டைக்குள் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மதுரையை சேர்ந்த பிரீத்தி என்பவரும் பயிற்சி பெற்றுவருகிறார். இவருக்கும், அவருடன் தங்கி இருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அப்போது அவரை, மற்ற பயிற்சி பெண்போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பயிற்சிமைய அதிகாரிகளிடத்தில் பிரீத்தி புகார் செய்துள்ளார். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதுகுறித்து அவர் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களும் வந்து புகார் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருடைய புகார்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அவர் நேற்று காலை பயிற்சி மையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பயிற்சிமைய அதிகாரிகள் சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

இந்த சம்பவத்தால் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்