பொதுமக்கள் குறைகளை ‘வாட்ஸ்-அப்’ மூலம் தெரிவிக்கலாம் வேலூர் புதிய கலெக்டர் சண்முகசுந்தரம் பேட்டி
பொதுமக்கள் தங்கள் குறைகளை ‘வாட்ஸ்-அப்’ மூலம் தெரிவிக்கலாம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ராமன் சேலம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சென்னையில் கலெக்டராக பணிபுரிந்த சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவரை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதேபோன்று அனைத்துத்துறை அதிகாரிகளும் கலெக்டருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டம், முதல் சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட மாவட்டம். வரலாற்று சிறப்புமிக்க மாவட்டத்தில் கலெக்டராக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மற்ற மாவட்டங்களை விட வேலூர் மாவட்டம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் மாவட்டம்.
மத்திய, மாநில அரசு திட்டங்கள் அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் சேவை செய்வேன். அரசின் 22 துறைகள் மூலம் மக்கள் நேரடியாக பயன்பெற்று வருகிறார்கள். இந்த துறைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைகிறதா? என்று கண்காணிக்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் குறைகள், கருத்துகளை ‘வாட்ஸ்-அப்’(9444135000) மூலம் தெரிவிக்கலாம். அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.