தாய் தன்னுடன் பேசவில்லையே என்ற மனவேதனையில், ராணுவ வீரர் தற்கொலை
தாய் தன்னுடன் பேசவில்லையே என்ற வருத்தத்தில் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்தவர் நாராயணன். அவருடைய மகன் மாதவன்(வயது 30). அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (29). இந்த தம்பதிக்கு கேசவன் (6), யுவராஜ் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர். மாதவன், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்தார். இந்தநிலையில் விடுமுறையில் கடந்த மாதம் 3-ந்தேதி தாத்தப்பன்குளத்துக்கு தனது குடும்பத்துடன் மாதவன் வந்து இருந்தார். அங்கு தனது சொந்த வீட்டில் தங்கியிருந்து பல்வேறு கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வந்தார். ஓய்வு எடுப்பதாக கூறி, தனது மனைவியிடம் கூறிய மாதவன் வீட்டின் ஒரு அறைக்குள் சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை.
இதற்கிடையே மாதவன் இருந்த அறைக்கதவை தமிழ்ச்செல்வி தட்டி பார்த்தார். ஆனால் எந்த தகவலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் விட்டத்தில் சேலையால் மாதவன் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாதவனிடம் அவருடைய தாய் செல்வி பேசாததால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதாவது, மாதவனுக்கும், செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வி, மகனுடன் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தனது தாயுடன் பேச மாதவன் பலமுறை முயன்று உள்ளார். இருப்பினும் செல்வி பேசவில்லை. இதுகுறித்து மாதவன் தனது மனைவியிடம் சொல்லி புலம்பினார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தாய் பேசாததால் ராணுவவீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.