4 மாவட்டங்களை கலக்கிய வழிப்பறி கொள்ளையன் கைது

திண்டுக்கல் உள்பட 4 மாவட்டங்களை கலக்கிய வழிப்பறி கொள்ளையனை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-30 22:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரம் சோலைஇல்லம் பகுதியை சேர்ந்தவர் சத்யநாதன். இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி புஷ்பா (வயது 45). இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி, புஷ்பா மளிகைக்கடையில் இருந்து வீட்டுக்கு தனியாக நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், புஷ்பா கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.

இதுகுறித்து திண்டு்க்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில் புஷ்பா புகார் ெசய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வழிப்பறி கொள்ளையனின் முகம், மோட்டார்சைக்கிள் எண் ஆகியவை தெளிவாக தெரிந்தன.

மேலும் அந்த மோட்டார்சைக்கிள் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே ஒரு தனியார் வாகன காப்பகத்தில் நிற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அதை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இதற் கிடையே 2 நாட்களுக்கு முன்பு மோட்டார்சைக்கிளை எடுப்பதற்காக, ஒருவர் அங்கு வந்தார்.

அவரை பிடித்து விசாரித்ததில், சென்னை ராயபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (45) என்பதும், புஷ்பாவிடம் நகை பறித்தவர் என்பதும் தெரியவந்தது. அதோடு சென்னை, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மோட்டார்சைக்கிளை வாகன காப்பகத்தில் நிறுத்திவிட்டு, பஸ்சில் தப்பிவிடுவதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியையும் பறிமுதல் செய்தனர். 4 மாவட்டங்களை கலக்கிய வழிப்பறி கொள்ளையன் சிக்கியதால், போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்