3 மாநில எல்லையில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களை துரத்திய புலி - வைரலாக பரவும் வீடியோவால் பரபரப்பு
தமிழக-கர்நாடக, கேரள எல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களை புலி துரத்தும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் தமிழக, கேரள மற்றும் கர்நாடக எல்லை உள்ளது. இந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் புலி, சிறுத்தைப்புலி, காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் அவ்வப்போது ரோட்டை கடந்து செல்கின்றன.
இந்த நிலையில் 3 மாநில எல்லைப்பகுதி அருகே வயநாடு-பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புலி ஒன்று ஆக்ரோஷத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களை துரத்தியது.
பின்னர் அந்த புலி வனப்பகுதிக்குள் ஓடி சென்றது. புலி துரத்தியதை அறிந்ததும் மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர், சமயோஜிதமாக செயல்பட்டு மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் புலியிடம் இருந்து அவர்கள் தப்பித்தனர். இந்த சம்பவம் அந்த வழியாக சென்றவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ வாட்ஸ்-அப், முகநூல் உள்பட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே இதுபோன்ற வனப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.