கட்சி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

கட்சி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2019-06-30 22:45 GMT
கடலூர்,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிஇருக்கிறார். இந்த போராட்டத்துக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா?

பதில்:- ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்

கேள்வி:- கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதா?

பதில்:- ஜனநாயகம் என்பது என்னவென்றால் ஒரு கட்சியில் ஒரு முடிவு எடுத்த பிறகு அந்த முடிவை வெற்றிபெற செய்கிறவர்கள்தான் கட்சியினுடைய உண்மையான தலைவர்கள், தொண்டர்கள். ஒரு முடிவு எடுத்து தேர்தலையும் சந்தித்தபிறகு அது தொடர்பாக விமர்சனம் செய்வது தவறு. அது ஒரு உள்கட்சி ஜனநாயகம் அல்ல. உள்கட்சி ஜனநாயகத்தை சீர்குலைக்கிற வேலை.

எல்லோரும் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது, கருத்து சொல்வது, ஒருவருக்கு ஒருவர் எதிரான கருத்துக்களை சொல்வது என்பது என்னுடைய தலைமையில் அது சாத்தியம் இல்லை. அப்படி யாராவது முயற்சிசெய்தார்கள் என்றால் நான் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. கட்சி கட்டுப்பாட்டை யாராவது மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க வேண்டாம் நாசே.ராமச்சந்திரனுக்கு சீட் கொடுக்க நீங்கள் பரிந்துரை செய்ததாக கராத்தே தியாகராஜன் கூறியிருக்கிறாரே?

பதில்:- கட்சிக்கு வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றால், கட்சியோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்றால், ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அகில இந்திய காங்கிரஸ் மாநில தலைவர்களின் கருத்தை கேட்பார்கள். மாநில தலைவரின் கருத்தை கேட்காமல் எதையும்செய்ய மாட்டார்கள்.

தலைவர் என்ற பொறுப்பில் நான் பலபேருக்கு சிபாரிசு செய்து இருக்கிறேன். அதில் ஒரு சிலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிலருக்கு கிடைக்கவில்லை. இதில் எனது கருத்தை நான் சொல்வதில் என்ன தவறு உள்ளது. இதற்காகத்தான் என்னை தலைவராக தேர்ந்து எடுத்துள்ளார்கள். தலைவராக இருக்கும் நான் எனது கருத்தை சொல்ல வேண்டும். அதற்கு மாறாக நான் ஊமையாக இருக்க முடியாது.

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி இல்லை. தமிழ்நாட்டில் கருத்துவேறுபாடு இல்லாத கட்சி இல்லை. மாநில கட்சிகளில் பிரச்சினை இருப்பதால் தலைவர்கள் உடனடியாக கூப்பிட்டு கண்டித்துவிடுவார்கள். ஆனால் எங்கள்தலைமை வெகு தூரத்தில் இருப்பதால் உடனடியாக கண்டிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி எனக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. இதன் மூலம் எனக்கு தவறு என்று தெரிந்தால் நான் நடவடிக்கை எடுக்கலாம். அதைத்தான் நான் செய்துள்ளேன். அதிலும் கடந்த 3 மாதங்களில் யாரும் வரம்புமீறி செல்லவில்லை. அதனால் எந்தபிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்