குன்னூர் ஏல மையத்தில், ரூ.11 கோடியே 89 லட்சத்துக்கு தேயிலைத்தூள் ஏலம்
குன்னூர் ஏல மையத்தில் ரூ.11 கோடியே 89 லட்சத்துக்கு தேயிலைத்தூள் ஏலம் போனது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் தேயிலைதூள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கம்பெனி தேயிலை எஸ்டேட் தொழிற்சாலைகள்உற்பத்தி செய்யும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பு நடத்தும் தேயிலை ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி இரு நாட்கள் நடைபெறுகின்றன. ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலை தூளை ஏலம் எடுக்கிறார்கள். விற்பனை எண் 26-க்கான ஏலம் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
ஏலத்திற்கு மொத்தம் 19 லட்சத்து 4 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது. இதில் 12லட்சத்து 20ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 6லட்சத்து 84ஆயிரம் கிலோ டஸ்ட்ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 73 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. இதன் அளவு 13 லட்சத்து 62 ஆயிரம் கிலோ ஆகும். இதன் ரொக்க மதிப்பு ரூ.11 கோடியே 89 லட்சம் ஆகும்.
ஏலத்தில் விற்பனையானஅனைத்து தேயிலை தூள் ரகங்களுக்கும் ரூ.5 வரை விலை வீழ்ச்சி ஏற்பட்டது. உயர்ந்தபட்ச விலையாக சி.டி.சி. ரக தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு 261 ரூபாய் என்ற விலையிலும், ஆர்தோடக்ஸ் தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு 235 ரூபாய் என்ற விலையிலும் ஏலம் சென்றது.
சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்றுக்கு 73 ரூபாயிலிருந்து 78 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு 107 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரையிலும் ஏலம் சென்றது. டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று 72 ரூபாயிலிருந்து 77 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு 108 ரூபாயிலிருந்து 118 ரூபாய் வரையிலும் ஏலம் சென்றது.
விற்பனை எண் 27-க்கான ஏலம் எதிர்வரும் 4,5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 21 லட்சத்து 95ஆயிரம் கிலோ தேயிலை தூள் வருகிறது.