இது பாம்பு அல்ல.. 13 அடி நீள விலாங்கு மீன் திருப்பூர் மார்க்கெட்டில் பொதுமக்கள் வியப்பு

திருப்பூர் மார்க்கெட்டில் நேற்று 13 அடி நீளமுள்ள விலாங்கு மீன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதை பார்க்க பாம்பு போன்று நீளமாக காணப்பட்டதால் மார்க்கெட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் வியந்து பார்த்து சென்றனர்.

Update: 2019-06-30 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் மீன் மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் வாரநாட்களில் தினசரி 40 டன் மீன்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் 50 டன் மீன்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, கர்நாடகா மற்றும் கேரளாவில் மீன் பிடிக்க வருகிற ஆகஸ்டு மாதம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது

அந்த வகையில் நேற்று தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட கடல் பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்கள் 30 டன்னும், ஆந்திராவில் இருந்து மீன்கள் 15 டன்னும் என மொத்தம் 45 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆந்திராவில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் டேம் மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்கள் என்பதால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கடல் மீன்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. மக்கள் ஆர்வத்துடன் அதை வாங்கிச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த மீன்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த பெட்டிகளில் இருந்த மீன்களை விற்பனைக்காக கீழே கொட்டினர். அப்போது ஒரு பெட்டியில் பாம்பு போன்ற நீளமான மீன் ஒன்று இருந்தது. அதை பார்த்ததும் மீன் வாங்க பொதுமக்கள் பயத்தில் பின்வாங்கினர். உடனே மீன் விற்பனையாளர், இது பாம்பு அல்ல.. பாம்பு போன்று நீளமான விலாங்கு வகையை சேர்ந்த கடல் மீன் என்றார்.

பின்னர் அவர் 13 அடி நீளமுள்ள அந்த விலாங்கு மீனை தனது கழுத்தில் தூக்கி போட்டுக்கொண்டு அங்கிருந்த பொதுமக்களுக்கு வேடிக்கை காட்டினார். பொதுமக்கள் ஒருவித பயத்துடன் அதை பார்த்து வியந்து ரசித்தாலும் யாரும் அதை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இது குறித்து மீன் மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறும் போது, எப்போதாவது அபூர்வமாக இது போன்ற விலாங்கு என்ற கடல் ஆரா மீன்கள் கிடைப்பதுண்டு. இது பார்ப்பதற்கு பாம்பு போல காணப்பட்டாலும், நல்ல சுவையான மீன்தான். மற்ற மீன்களை விட இதன் விலையும் குறைவு தான். ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீனை வாங்குபவர்கள் மிகக்குறைவுதான் என்றனர்.

மேலும் செய்திகள்