ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-06-30 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூரில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கழகத்தின் மாநில சிறப்பு தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். நிறுவனர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாநில தலைவர் உதயசூரியன், மாநில பொதுச்செயலாளர் பெனின்தேவகுமார், மாநில பொருளாளர் நடராஜன், மாநில சட்ட ஆலோசகர் ஆன்ட்ரூஸ், மாநில துணைத்தலைவர் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வானது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசு விதிமுறைகளை மீறி எக்காரணம் கொண்டும் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் சென்றவர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கூடாது.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். எல்லா ஊரக பகுதிகளுக்கும் ஒரே விதமான வீட்டு வாடகை படி நிர்ணயிக்க வேண்டும்.

இடைநிலை கல்வியில் 6 முதல் 8 வகுப்புகளுக்கு உள்ளதுபோல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு தற்போது உள்ள ஆசிரியர், மாணவர் விகிதாசாரம் ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்பதை ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர்கள் என மாற்றிட வேண்டும். அதனால் ஏற்படும் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வினை பெற்று கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும். ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்