திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் 95 குடிமராமத்து பணிகள் கலெக்டர் ஆனந்த் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் 95 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளபட உள்ளதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-30 23:00 GMT
திருவாரூர்,

தமிழகத்தின் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பு ஆண்டில் 1,829 குடி மராமத்து பணிகளை ரூ.499 கோடியே 68 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நீர்்வள ஆதாரத்துறையின் மூலமாக 95 குடிமராமத்து பணிகளை ரூ.16 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்வாருதல், பழுதடைந்த கட்டுமானங்களை புனரமைத்தல், அடைப்பு பலகைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் குடிமராமத்து பணிகளாக மேற்கொள்ளப்படும். குடிமராமத்து பணிகள் மூலம் பயன்பெறும் விவசாயிகளினால் பாசனதாரர் சங்கம் அமைத்து நிறைவேற்ற வேண்டும்.

பாசன சங்கம்

விவசாயிகள் மாவட்ட பதிவு அலுவலகத்தில் 51 சதவீதத்திற்கு மேல் உள்ள உறுப்பினர்களை கொண்ட பாசனதாரர் சங்கத்தை பதிந்து உடனடியாக பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தை அணுகினால் பணிகள் வழங்கப்படும். நடப்பாண்டு மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இப்பணிகளை முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் உடனடியாக பாசன சங்கம் அமைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியின் திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் அரசு நிதியாகவும், 10 சதவீதமாக விவசாயிகளின் பங்களிப்பாகவும் இருக்கும். விவசாயிகளின் பங்களிப்பு நிதியாகவோ, பொருளாகவோ அல்லது பணியாகவோ இருக்கலாம். அந்தந்த வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட பாசனதாரர்கள் சங்கத்தினால் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள முடியும் வேறு பாசனதாரர் சங்கத்தினால் இப்பணிகளை மேற்கொள்ள முடியாது. எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாசனதாரர் சங்கங்கள் குடிமராமத்து திட்டம் குறித்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளின் விவரத்தினை நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் பெற்று, குடிமராமத்து பணிகளில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்