வந்தவாசி அருகே 100 இருளர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
வந்தவாசி அருகே 100 இருளர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வந்தவாசி,
வந்தவாசி அருகே தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீசநல்லூர் கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் எதிரில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலதன மானிய நிதி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவற்றின் கீழ் ரூ.1 கோடியே 76 லட்சத்தில் 43 இருளர் குடும்பத்தினருக்கு புதிய வீடுகள் கட்டப்பட்டன. மின்வசதி, தெருவிளக்குவசதி, சிமெண்டு சாலைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, சமுதாய கூடம், ஒரே இடத்தில் மாடுகள் வளர்க்க மாட்டு கொட்டகை போன்ற வசதிகளுடன் கூடிய இந்த வீடுகள் பயனாளிகளிடம் கடந்த ஆண்டு ஒப்படைக்கப்பட்டன.
இதேபோல் மேலும் 100 இருளர் குடும்பத்தினருக்கு ரூ.3½ கோடி செலவில் 100 வீடுகள் வழங்க அதே பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் ஒரு மாணவிக்கு சைக்கிள், 3 மாணவிகளுக்கு ஆடைகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா, செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், வந்தவாசி தாசில்தார் முரளிதரன், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் அற்புதம், தெள்ளார் ஒன்றிய ஆணையாளர் பரணிதரன், ஆரணி கோட்ட செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் சபாநாயகம், ஒன்றிய பொறியாளர்கள் மணிகண்டன், செல்வராஜ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.