புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பபெற வேண்டும்

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பபெற வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-06-30 22:30 GMT
நாமக்கல், 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆசைதம்பி தலைமை தாங்கினார். நாமக்கல் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் பிரபு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருக செல்வராசன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

கூட்டத்தில், புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையின் பரிந்துரைகள் இருமொழி கொள்கையை காவு வாங்கிடும் வகையிலும், இடஒதுக்கீடு முறையை பறித்திடும் வகையிலும் உள்ளது. எனவே புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய அரசு முற்றிலும் திரும்பபெற வேண்டும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி, மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்புகளை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதாக மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் வழக்குகள், தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட அனைத்து வகையான வழிவாங்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். அங்கன்வாடி மைய முன்மழலையர் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை கைவிட வேண்டும்.

பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ஆசிரியர்கள் 1.6.2019-க்கு முன்னர் தற்போது பணியாற்றும் பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கல்வித்துறை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்