மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் விரக்தி: தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை
மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி,
புதுவை சோலைநகர் முல்லை வீதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 56). மீனவர். இவரது முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் 2-வது மனைவியான மலர்விழி என்பவருடன் வாழ்ந்து வந்தார்.
குடிப்பழக்கம் உடைய தினகரனுக்கும் மலர்விழிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே மலர்விழி கணவனுடன் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அங்கு சென்று தினகரன் சமாதானம் பேசியுள்ளார். ஆனால் அதை ஏற்க மனைவி மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தினகரன் உறவினர் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சோலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.