காஞ்சீபுரம் ஆதி அத்திவரதர் தரிசன கட்டணத்தை நீக்க வேண்டும் இந்து முன்னணி கூட்டத்தில் வலியுறுத்தல்
காஞ்சீபுரம் ஆதி அத்திவரதர் தரிசன கட்டணத்தை நீக்க வேண்டும் என இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நெல்லை கோட்ட செயலாளர் தங்க மனோகரன் முன்னிலை வகித்தார். வி.எம்.குமார், மாரியப்பன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கூட்டத்தில், அய்யா வைகுண்டரின் வரலாற்றை தவறாக சித்தரிக்கும் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை நசுக்க முயற்சி செய்வதற்கு கண்டனம் தெரிவிப்பது, ராஜராஜசோழனை அவமரியாதையாக பேசிய ரஞ்சித்துக்கு கண்டனம் தெரிவிப்பது, தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்துக்கு அரசே நிரந்தர தீர்வு காண வேண்டும். காஞ்சீபுரம் ஆதி அத்திவரதர் தரிசன கட்டணத்தை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கும்மிடிபூண்டியில் பழமையான கோவில் ஒன்று அழியக்கூடிய நிலையில் இருந்தது. அந்த கோவிலை அங்குள்ள ஒரு குடும்பம் காப்பாற்றி வருகிறது. முற்றும் துறந்த முனிவர்களின் கடுமையான உழைப்பாலும், தியாகத்தாலும் நாட்டில் ஏராளமான கோவில்கள் இருக்கிறது. கோவில்களில் ஆறு கால பூஜை, நித்திய அன்னதானம் நடக்க வேண்டும். கோமாதாவை காப்பாற்ற வேண்டும்.
சத்ரபதி சிவாஜிக்கு குருவாக இருந்த ராமதாஸ் சுவாமிகள், அவரிடம் செய்து முடிக்க முடியாத காரியத்தை கூட செய்து முடிக்க வேண்டும் என்று சொன்னார். இந்து முன்னணியின் உழைப்பால் அது இன்று மாபெரும் சக்தியாக உருவாகியுள்ளது. கிராமங்களில் இந்து கோவில்கள் இடிந்துள்ளது. நாம் மீண்டும் அவற்றை புதுப்பிக்க வேண்டும். அதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். கோவில்கள் தான் நமக்கு மையப்புள்ளி. தர்மத்தை பரப்ப வேண்டும். அதற்கு நாம் முன்உதாரணமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பாளர் பக்தன், இணை அமைப்பாளர்கள் ராஜேஷ், பொன்னையா, மாநில பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், அரசுராஜா, பரமேஸ்வரன், மாநில துணைத்தலைவர்கள் வி.பி.ஜெயக்குமார், பூசப்பன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.