ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களை திசை திருப்பும் முயற்சி காதர் முகைதீன் பேட்டி
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களை திசை திருப்பும் முயற்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.
நெல்லை,
இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம், ஒரே தேர்தல், ஒரே மொழி என்று கூறுகின்றனர். மேலும் ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மனசு, ஒரே பார்வை என்று கூறினாலும் கூறுவார்களோ? என்று தெரியவில்லை. இந்தியாவை ஒரே தேசம் என்று கூறுவதே தவறு. இந்தியா என்பது தேசிய இனங்கள் கொண்ட நாடு. இங்கு 4,636 சாதிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் கூறிஉள்ளனர்.
ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கலாசாரம் உள்ளது. இமயமலை சாரலில் வாழும் ஒரு பெண் தற்போதும் 5 பேரை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. அப்படி உள்ள நாட்டில், இந்து மதத்துக்குள் ஒரே சட்டம் கொண்டு வரமுடியுமா? தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் திருமண சட்டம், கிறிஸ்தவ திருமண சட்டம், முஸ்லிம்கள் திருமண சட்டம் என்பது வெவ்வேறாக உள்ளது. தமிழகத்தில் உள்ள இந்துக்கள் திருமண சட்டத்தை வடநாட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாடு. காந்தியை விட சிறந்த இந்து நம்பிக்கை உடையவர் வேறு யாரும் கிடையாது. அவர் இந்து மதத்தில் இருந்து நன்மை செய்தார். அவர் எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை. இந்தியா அனைத்து மக்களுக்கும் சொந்தமான நாடு.
தற்போது மத்தியில் வந்து இருக்கும் அரசு கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதாரம் உள்பட அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. மக்களின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. இதனடிப்படையில் புரட்சி ஏற்பட்டு அரசுக்கு ஆபத்து வந்து விடுமோ? என்று கருதி இந்த மாதிரி ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற கருத்துகளை கூறி வருகின்றனர். இது மக்களை திசை திருப்பும் முயற்சி ஆகும்.
தமிழ்நாட்டில் குளங்களை தூர்வாருவதற்கு குடிமராமத்து பணியை ஜெயலலிதா கொண்டு வந்தார். அதை தற்போதைய அரசு செயல்படுத்தவில்லை. ஏரி, குளங்கள் தூர்வாரப்படாமல் முட்செடிகள் நிறைந்து காணப்படுகிறது. தமிழக அரசு, மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்பட்டதே தற்போதைய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் ஆகும். இந்த பிரச்சினை தீர இந்த அரசு வீட்டுக்கு போக வேண்டும். தி.மு.க. தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும். அப்படி வந்தால் நல்லது நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை சார்பில் காயிதே மில்லத் மருத்துவ உதவி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சபை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோதர் மைதீன் தலைமை தாங்கினார். செயலாளர் துராப்ஷா, நிர்வாகிகள் அப்துல் மஜீத், செய்யது சுலைமான், மீராசா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் முகைதீன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் கட்சி தேசிய அமைப்பு செயலாளர் முகமது பஷீர் எம்.பி., ராமநாதபுரம் தொகுதி நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் வாழ்த்தினர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி துஆ செய்து ஆசி வழங்கினார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நெல்லை மாவட்ட நிர்வாகிகள் பாட்டபத்து முகமது அலி, முகமது கடாபி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் மீரான் முகைதீன் நன்றி கூறினார்.