பங்களாப்புதூர் அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

பங்களாப்புதூர் அருகே நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-06-30 22:45 GMT

டி.என்.பாளையம்,

திருப்பூர் சந்திரா காலனியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவருடைய மகன் தனசேகர் (வயது 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று தனசேகர் மற்றும் அவருடைய நண்பர்கள் 7 பேர் மோட்டார் சைக்கிள்களில் கோபி பங்களாப்புதூர் அருகே நஞ்சைபுளியம்பட்டி பகுதியில் செல்லும் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர்கள் 8 பேரும் ஆற்றில் இறங்கி ஆனந்தமாக குளித்துக்கொண்டு இருந்தனர். இதில் தனசேகர் மட்டும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

அப்போது அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார். இதனை கவனித்த நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தனசேகரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் தனசேகர் தண்ணீரில் மூழ்கினார்.

இதைத்தொடர்ந்து இதுபற்றி கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆற்றில் மூழ்கிய தனசேகரை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் அங்கு சென்று, தனசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனசேகரின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்