பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

Update: 2019-06-30 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணையில் இருந்து பெருந்துறை பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், கூட்டுக்குடிநீர் திட்டம் அமைத்தால் பாதிப்பு ஏற்படுமா? என்று ஆய்வு செய்ய ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக்கோரி பெருந்துறை தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் நேற்று காலை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பல்வேறு வாகனங்களில் பல ஆயிரம் பேர் திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்றனர்.

தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலரை கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். மீதமுள்ளவர்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். மாவட்ட கலெக்டர் சி.கதிரவனிடம் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார். அப்போது, பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

அதன்பின்னர் வெளியே வந்த தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெருந்துறை தொகுதி ஆற்று பாசனமில்லாத பகுதியாகும். தமிழகத்திலேயே மிகப்பெரிய சிப்காட் தொழில் வளாகம் பெருந்துறையில் அமைந்துள்ளது. இதனால் அங்குள்ள நிலத்தடிநீரையும் குடிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பவானி ஆற்றில் இருந்து பெருந்துறைக்கு குடிநீரை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன்படி மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்பின்னர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாய் உள்ளத்தோடு இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.254 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும் திட்டத்தை ஆய்வு செய்து நிறைவேற்ற முழுமையான நடவடிக்கை எடுத்தார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் விடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 72 ஊராட்சிகள், 8 பேரூராட்சிகள் பயன்பெறும்.

பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கி 8 மாதங்களில் 60 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. இன்னும் 6 மாதங்களில் பணிகள் நிறைவடைந்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும் நிலை உள்ளது. இந்தநிலையில் தடப்பள்ளி– அரக்கன்கோட்டை பாசன பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுத்தால் பாசனம் பாதிக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அப்போது பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பாசனத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்பதால், திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம்.

பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதில் தினமும் 7 கனஅடி தண்ணீரை மட்டுமே பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எடுக்கிறோம். இதனால் ஒரு சதவீத தண்ணீரை மட்டுமே பயன்படுத்த உள்ளோம். இருந்தாலும், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், கொடிவேரியில் இருந்து தண்ணீர் எடுத்தால் பாதிப்பு ஏற்படுமா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அதுவரை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் அமைதி காத்து வருகிறோம்.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடிவேரியில் விவசாயிகள் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் பெருந்துறை தொகுதிகளில் 10 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கொடுக்க முடியவில்லை. கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக விவசாயத்துக்கோ, தொழிற்சாலைக்கோ தண்ணீரை பயன்படுத்த கேட்கவில்லை. 100 சதவீதம் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்த உள்ளோம். ஒரே மாவட்டத்தில் இருந்து குடிநீரை தரமறுத்தால், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எப்படி தண்ணீர் கொடுப்பார்கள்?

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து வேலூருக்கும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கும், சிறுவாணியில் இருந்து கோவைக்கும், கரூரில் இருந்து ராமநாதபுரத்துக்கும், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கும் என பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் அந்த திட்டங்களுக்கு எந்த பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே பெருந்துறை தொகுதி மக்களையும் நண்பர்களாகவும், சகோதரர்களாகவும் நினைத்து குடிநீர் வழங்க விவசாயிகள் முன்வரவேண்டும். அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனு கொடுக்கும்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்